இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர். ‘ஹவுஸ் ஃபுல்’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்' போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ படத்தை எழுதி இயக்கியிருந்தார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்த இப்படத்தை, அவரே தயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்த படங்கள் வெறும் பன்னிரண்டுதான். பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விருது விழாக்களுக்கும் தேர்வு செய்யப்பட்டது.
ஒருவர் மட்டுமே நடித்திருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்த்த இப்படம், முதலில் திரையரங்கில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், இப்படம் அடுத்து பாலிவுட்டுக்கு செல்லவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஹிந்தி மொழிக்கேற்ப என்ன டைட்டில் வைக்கலாம் என சமீபத்தில் இயக்குநர் பார்த்திபன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பலரும் பதில் அளித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ஹிந்தி தலைப்புகளைப் பரிந்துரை செய்த நபர்களுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அதில்...
"புதிதாய் இன்று பிறக்கிறோம்
எளிதாய் சிரமம் கடக்கிறோம்.
பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம்.
ஹிந்தி தலைப்பு - அள்ளி வழங்கிய,
எண்ணிலடங்கா - எதிர்பாரா கோணங்களில் .
பலரது பாராட்டுக்குரியது,
சிலது சிறப்பு!
அனைத்தும் பரிசீலனையில்.
விரைவில் தேர்வாகும்.
பங்குக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி!" என பதிவிட்டுள்ளார்.