மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் நடந்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியது. இதுக்குப் பிறகு நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிரங்கமாக பொது வெளியில் பேசியும் காவல் நிலையத்தில் புகாரளித்தும் வந்தனர். இந்த புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த வகையில் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அதாவது பட வாய்ப்பு தருவதாகக் கூறி துபாயில் வைத்து நிவின் பாலி தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அந்த பெண் புகார் அளித்தார். அதனடிப்படையில் எர்ணாகுளம் ஊன்னுக்கல் காவல் நிலையத்தில் நிவின் பாலி மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நிவின் பாலி இந்த பாலியல் புகாரை மறுத்தார். மேலும் சட்டப்படி அதை எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தேதியில் நிவின் பாலி தன்னுடன் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார். மேலும் நடிகை பார்வதி கிருஷ்ணா மற்றும் பகத் மானுவெல் ஆகியோர் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ படப்பிடிப்பில் நிவின் பாலி தங்களுடன் இருந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இதனை அடுத்து புகார் கூறிய பெண்ணிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக எர்ணாகுளம் கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் டி.ஒய்.எஸ்.பி. அறிக்கை சமர்பித்தார். அதில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த பெண் சொல்லப்படும் தேதி மற்றும் இடத்தில் நிவின் பாலி இல்லை என்பது தெரியவந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆறாவது குற்றவாளியாக நிவின் பாலியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிவின் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரின் அன்புக்கும், பிராத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.