Skip to main content

"நல்ல மனிதர்களாக இருங்கள்" - வைரலான வதந்திக்கு நித்யா மேனன் அதிரடி!

 

nithya menen explained about his rumours

 

சித்தார்த்தின் 180 படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல், திருச்சிற்றம்பலம் எனப் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், தற்போது தெலுங்கில் 'குமரி ஸ்ரீமதி' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளிலும் வருகிற 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகுவதாக கூறப்படும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்தியிலும் விவேக் ஓபராய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாக பேசப்படுகிறது. 

 

இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக உள்ள நித்யா மேனன், தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை எனவும், ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பதாகவும் தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்துவதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. அது பலராலும் பகிரப்பட்டு வைரலானது. 

 

இந்த நிலையில் நித்யா மேனன் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் எந்த நிகழ்ச்சியிலும் பேட்டி கொடுக்கவில்லை. முற்றிலும் தவறான செய்தி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வதந்தியை யார் தொடங்கினார், தெரிந்தால் பகிரவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 

இதையடுத்து மற்றொரு பதிவில், "குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பதைப் பார்க்கும் போது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எடுத்து கூறினால் தான் இது போன்ற மோசமான நிகழ்வுகள் நிறுத்தப்படும் என்ற நோக்கில் இதை சுட்டிக்காட்டுகிறேன்" எனக் குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனங்களை டேக் செய்து "நல்ல மனிதர்களாக இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.