நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரபல சீரிஸ்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'தி பிக் பேங் தியரி'. மொத்தம் 12 சீசன்களை கொண்ட இந்த தொடர் செப்டம்பர் 24, 2007 முதல் மே 16, 2019 வரை வெளியிடப்பட்டது. இந்த தொடரை மார்க் செண்ட்ரோவ்ஸ்கி இயக்க ஜானி, ஜிம் பார்சன்ஸ், கேலி குவோகோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடரின் இரண்டாவது சீசனில் முதல் எபிசோடில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனை மாதுரி தீட்சித்துடன் ஒப்பிட்டு பேசி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் நடிகை மாதுரி தீட்சித்தை தரக்குறைவாக பேசியதாக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர் மிதுன் விஜய் குமார், அந்த குறிப்பிட்ட எபிசோடை நீக்குமாறு நெட் ஃப்லிக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள நோட்டீசில், "தி பிக் பேங் தியரி தொடரில் நடிகை மாதுரி தீட்சித்தை பாலியல் தொழில் செய்யும் நடிகை என தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இது இந்திய கலாச்சாரம் மற்றும் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் மற்றும் புண்படுத்தும் செயலாகும். இந்த வசனம் பாலியல் மற்றும் பெண் வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மிதுன் விஜய் குமார் தான் ஒரு மாதுரி தீட்சித் ரசிகரின் என குறிப்பிட்டுள்ளார்.