Nagarjuna apologized to the fan

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் அடுத்த கட்ட படிப்பிடிப்பிற்காக தனுஷ், நாகர்ஜுனா உள்ளிட்ட நடிகர்கள் ஐதராபாத்திற்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாகர்ஜுனாவிடம், அங்கிருந்து முதியவர் ஒருவர் அருகில் வந்து பேச முயன்றார். அப்போது, நாகர்ஜுனாவின் பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இந்தச் சம்பவத்தை கவனிக்காமல் நாகர்ஜுனாவும் அங்கிருந்து சென்றார்.

Advertisment

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது நாகர்ஜுனா அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் அந்த வீடியோவை பகிர்ந்து, ‘இது இப்போதுதான் என்னுடைய கவனத்திற்கு வந்தது. இது கண்டிப்பாக நடந்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.