செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' படம் இன்று (29.09.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக ரசிகர்கள் தனது பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகுவதை முன்னிட்டு திரையங்கு முன்பு கட் அவுட் வைப்பது வழக்கம்.
அந்த வகையில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கு முன்பு தனுஷிற்கு கட் அவுட் வைத்துள்ளனர். அந்த பேனருக்கு மாலை அணிவித்து பூக்களை தூவியும், கையில் சூடம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளனர். அப்போது தனுஷின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பால் மற்றும் பீர் அபிஷேகம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே போல் தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலிலும் கடலுக்கு அடியில் நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஒரு பேனரும் வைத்து படத்தை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் தனது ரசிகர்களுக்கு, இது போன்று (பால்,பீர் அபிஷேகம்) கொண்டாடுவதை தவிர்த்து விட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்யுங்கள் என அறிவுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் (ரகுவரன் கதாபாத்திரம்) புகைபிடித்த காட்சி தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பின்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக பலரும் முன்னணி பிரபலங்கள் தன் ரசிகர்களை தவறான பாதையில் கொண்டு செல்கிறார்கள் என கருத்து கூறி வந்தனர். இந்த சூழலில் ஹீரோக்களின் பேச்சை கருத்தில் கொள்ளாமலும் மக்கள் கூறும் கருத்துக்களை கேட்காமலும் தொடர்ந்து ரசிகர்கள் இது போன்று செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.