பாலிவுட்டில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சுனில் பால். இவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் சமீபத்தில் கடத்தப்பட்டுள்ளார். நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஒரு கும்பலால் மும்பையில் இருந்து மீரட்டுக்கு கடத்தப்பட்டுள்ளார். பின்பு கடத்தல்காரர்கள் அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.20 லட்சம் தரவேண்டும் என்று சுனில் பால் குடும்பத்தினரை மிரட்டி, ரூ.7.5 லட்சம் பெற்றுக் கொண்டு அதில் இருந்து ரூ.20 ஆயிரத்தை சுனில் பாலிடம் கொடுத்து விட்டு தப்பினர். வேலை இல்லாத காரணத்தால் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக சுனில் பாலிடம் தெரிவித்து வேலை கிடைத்த பின்னர் பணத்தை திரும்பித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மும்பையில் உள்ள சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது சுனில் பாலும் கடத்தல் கும்பளில் இருந்த ஒருவரும் பேசும் ஆடியோ கசிந்ததாகவும் அதை வைத்து பார்க்கையில் சுனில் நாடகமாடியிருக்கலாம் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இவரை போன்றே மற்றொரு பாலிவுட் நடிகரான முஷ்தாக் கான், கடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முஷ்தாக் கானின் தொழில் பங்குதாரர் சிவம் யாதவ் ஒரு ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், “கடந்த நவம்பர் ௨௦ஆம் தேதி மீரட்டில் நடந்த விருது நிகழ்ச்சிக்கு முஷ்தாக் அழைக்கப்பட்டார். அதற்காக முன் பணம் கொடுத்து விமான டிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது. அதை வைத்து டெல்லி சென்றதும் காரில் அவரை ஏற சொல்லி கடத்தினர். 12 மணி நேரம் முஷ்தாக் கானை சித்திரவதை செய்து அவரை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டனர். பின்பு முஷ்தாக் கான் வங்கி கணக்கு மற்றும் அவரது மகன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் எடுத்தனர். பின்பு அவர்களிடம் இருந்து தப்பித்து போலீஸ் உதவியுடன் முஷ்தாக் கான் மீண்டு வந்தார்” என்றார். மேலும் இது தொடர்பாக பிஜ்னோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் போலீஸ் விரைவில் கண்டுப்பிடித்துவிடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.