காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா சமீபத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னாய் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகிய இருவருக்கும் பாடகர் சித்து மூஸ் வாலா போன்று கொடூரமாக கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதமும் கூட லாரன்ஸ் பிஷ்னாய்யிடம் இருந்து வந்தாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் சல்மான் கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வகை மான்களை பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர். இதையடுத்து ஆத்திரமடைந்த லாரன்ஸ் பிஷ்னாய் இந்த மானை கொன்றதற்காக சல்மான் கானை கொன்றுவிடுவோம் எனக் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து நடிகர் சல்மான் கான் மும்பை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து தற்காத்து கொள்ள அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.