நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி மற்றும் அவர் நடித்து வந்த சீரியல் நடிகர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்பு செய்தியாளர்களிடம் மாரிமுத்துவுடன் பணியாற்றியதை கண்ணீர் மல்கத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர், "இந்த வருடத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் மூன்றாவதாக இந்த இழப்பு. முதலில் மயில்சாமி அடுத்து மனோபாலா இப்போது மாரிமுத்து சார். ஒரு பத்து நாள் முன்பு கூட படப்பிடிப்பில் நானும் அவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
இன்றைக்கு காலையில் இப்படி ஆகிருச்சு. எப்ப யாருக்கு என்ன நடக்கிறது என்பது ஒண்ணுமே தெரியவில்லை. ரொம்ப நல்ல பண்பாளர். சமூக சிந்தனையாளர். கடைசி வரைக்கும் எல்லோருக்கும் ரொம்ப நல்லவராக இருந்திட்டு இறைவனடி சேர்த்திருக்கிறார். அன்றைக்கு படப்பிடிப்பில் ரொம்ப நேரம் பல விஷயங்களை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம். வாழ்க்கை நிலையற்றது என்பது சரி. திடீர்னு இந்த மாதிரி ஆகும்போது அதை ஜீரணிக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்" என கண்ணீர் மல்கப் பேசினார்.