Skip to main content

ஃபர்ஹானா படம் சர்ச்சை; மனிதநேய ஜனநாயக கட்சி விளக்கம்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

mjk about movie farhana

 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்துக்கு செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

 

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, "மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கை செய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" என அறிக்கை வெளியிட்டது. 

 

இதையடுத்து திருவாரூரில் உள்ள 1 திரையரங்கில் எதிர்ப்பின் காரணமாக இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தை இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுக்காக நேற்று சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

 

இதையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சி வெளியிட்ட பதிவில், "ஃபர்ஹானா திரைப்படத்தின் பிரத்யேக காட்சி அப்படக்குழு சார்பில் திரையிடப்பட்டது. முன்னதாக இதன் இயக்குனர் நெல்சன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியை தொடர்புக் கொண்டு இத்திரைப்படம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு காட்சிக்கு வருமாறும், பலருக்கும் அழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டார்.

 

அவர் தொடர் நிகழ்ச்சிகளில் இருப்பதால், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதுமில்லை என பலரும் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது" என குறிப்பிடப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்