Skip to main content

‘மெய்யழகன்’ - அதிரடி மாற்றம் செய்த படக்குழு 

Published on 01/10/2024 | Edited on 01/10/2024
meiyazhagan trimmed to 2 hrs 32 minutes

96 பட இயக்குநர் ச.பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மெய்யழகன்’. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், தேவதர்சினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இருப்பினும் மாரி செல்வராஜ் லிங்குசாமி, விஷ்ணு விஷால், அல்போன்ஸ் புத்ரன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களின் பாராட்டை இப்படம் பெற்றிருந்தது. 

இதனிடையே படத்தின் நீளம் குறையாக அமைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் இருந்து வந்தது. இந்த நிலையில் படத்தின் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. திரைமொழியின் வழக்கமான பாணியில் இருந்து விலகிய ஒரு திரை அனுபவத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததற்கு நன்றி. ஏராளமான அனுபவ பகிரவுகள் இந்த படைப்பின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. 

மெய்யழகளை உணர்ந்து புரிந்துகொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டு வந்த நிலையில், ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எல்லோரது திருப்தியும் எனக்கு முக்கியம். அதுவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறு. எனவே இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு 2 மணி நேரம் 32 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் பேசும் அன்பும். திரை அனுபவமும் சற்றும் குறையவில்லை” எனக் குறிப்பிட்டு படக்குழுவினர் எல்லா சூழலிலும் துணை நின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்