விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு அதே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியானது.
அப்போது இந்தி பதிப்பினை வெளியிட தணிக்கை வாரிய குழு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை வைத்தார் விஷால். மேலும், படத்தை வெளியிடவேண்டும் என்ற நெருக்கடியால் பணத்தை கொடுத்துவிட்டதாகவும் பகிர்ந்திருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், அமைச்சகத்தின் மூத்த அதிகாரியை கொண்டு மும்பையில் விசாரணை நடத்த அனுப்பினர். உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்திருந்தார்.
பின்பு சிபிஐ இந்த விவகாரம் தொடர்பாக தரகர்கள் மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் மற்றும் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. பின்பு விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் கடந்த மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது. ஹரி கிருஷ்ணன் மூலம் தான் சென்சார் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக தெரிய வந்த நிலையில், அதனடிப்படையில் எப்படி கேட்கப்பட்டது, எவ்வளவு பெறப்பட்டது என்பது தொடர்பாக விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும், தரகர்கள் மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளதாகவும், அவர்களின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஷால் நேரில் ஆஜராகியுள்ளார். அவரோடு அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணனும் ஆஜராகியுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.