மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான 'மாமன்னன்', வெற்றிகரமாக 50 நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், "நான் பாடிக் கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதனை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன்.. என் வயிற்றிலிருந்து குடலை உருவி.. யாழாக மாற்றி அதை தெருத்தெருவாக மீட்டி வருவேன்...உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன்" என சிறிதளவே பேசினார். முன்பாக படத்திற்காக உழைத்த அத்தனை நபர்களையும் நன்றி பாராட்டினார். மாரி செல்வராஜின் உதவி இயக்குநர்களின் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசாக புகைப்பட ஃபிரேமினை வழங்கினார்கள்.
நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரஞ்சித், மாரிசெல்வராஜ் படங்களால் தான் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு, "உண்மையை தேடும் காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன்" என பதிலளித்தார். ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக மக்களிடம் சென்று சேர்ந்து விட்டதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "இல்லை. அதை கொண்டாடுபவர்களிடம் தான் கேட்க வேண்டும். மக்களிடம் சேர்ப்பதற்கே எல்லா கதாபாத்திரங்களும் உருவாக்கப்படுகிறது. படமென்பது நான்கு நாட்களில் முடிந்து விடாது. அது பல வருடங்கள் இருக்கும். அன்றைக்கு கதாபாத்திரம் வேறு மாதிரி மாறலாம்" என பதிலளித்தார்.