மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக படக்குழுவினர் உட்பட பல திரைப்பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது மாரி செல்வராஜ் பேசியது, "எந்த ஜானரில் படம் எடுத்தாலும் அதில் சமூகநீதி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அந்த வகையில் இந்த படமும் என்னுடைய வாழ்வியல் சம்பந்தமான சமூகநீதி பேசக்கூடிய படமாக நிச்சயம் இருக்கும். இந்த படம் மட்டுமல்ல இனிமேல் எந்த படம் எடுத்தாலும் எத்தனை படம் எடுத்தாலும் அதில் சமூகநீதிக்கான அரசியல் கண்டிப்பா இருக்கும். எல்லாரும் வடிவேலு சாரை வேறொரு கதாபாத்திரத்தில் பார்த்திடமாட்டோமா என ஏங்கி உள்ளார்கள். அவர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக மாமன்னன் இருக்கும். மேலும் படம் வெளியான பிறகு நிறைய அதிர்வலைகளை உருவாக்கும்" என்றார்.
பிறகு விழா மேடையில் பேசிய அவர், "மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் என்னுடைய அப்பா. என் கண்ணீரை, என்னுடைய வலியை அவர் மொழியில் காட்டி உள்ளார். என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் மாமன்னன். தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு வலி, வேதனைகள் ஏற்பட்டது. ஒரு சினிமா எப்படி புரட்டிப் போடுகிறது? எது சரி தவறு என தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த நாள். அதில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன். இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை" என்றார்.