Skip to main content

'மாமன்னனைக் கண்டுணர்ந்த நொடி இதுதான்' - வடிவேலு குறித்து வீடியோ பகிர்ந்த மாரி செல்வராஜ்

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

mari selvaraj about vadivelu

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. 

 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி நெட் ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த தளத்தில் தற்போது வரை இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர். குறிப்பாக வடிவேலு நடிப்பையும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தையும் கொண்டாடினார்கள். 

 

அண்மையில் இயக்குநர் பிரம்மா, "மாமன்னனை இப்போது ஓடிடி யில் பார்க்க நேர்ந்தது. பல வருட வலியை இத்தனை அழுத்தத்துடன் இரண்டரை மணி நேரத்தில் இந்த உலகுக்குக் கடத்த உனக்கு எவ்வளவு உறுதியும் வலிமையும் தேவைப்பட்டிருக்கும். அதில் விழுந்த ஒவ்வொரு கல்லடியும், அறையும் என் மேலும் விழுந்தது. பார்த்த லட்சக்கணக்கானோரின் மேலும் விழுந்திருக்க வேண்டும். அப்படித்தான் மாமன்னன் இன்று இத்தனை உயரத்தில் நிற்கிறான்" எனப் பாராட்டியிருந்ததாக மாரி செல்வராஜ் பதிவிட்டிருந்தார். 

 

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு பாடிய வீடியோவை மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும், பயணமும் இந்த நொடி தான்" எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'ஞாயிறு என்பது கண்ணாக... திங்கள் என்பது பெண்ணாக...' என்ற பாடலைப் பாடுகிறார் வடிவேலு. இந்த வீடியோ தற்போது வைரலாகத் தொடங்கியிருக்கிறது.  
 

 

 

 

சார்ந்த செய்திகள்