Skip to main content

"அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன்" - ஃபகத் ஃபாசில் குறித்து மாரி செல்வராஜ்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

mari selvaraj about fahadh faasil

 

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த ஃபகத் ஃபாசில், மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் வில்லனாக நடித்திருந்த அவர் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கிய  'சூப்பர் டீலக்ஸ்', லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அடுத்து சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த ரத்னவேல் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. 

 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாரி செல்வராஜ், "வணக்கம் பகத் சார். உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன்.

 

மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்" எனத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்