Skip to main content

3 தேசிய விருதுகளை வென்ற படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021
csfvsavas

 

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’. இதில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், பிரியதர்ஷனின் மகள் பிரியாகிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 16ஆம் நூற்றாண்டில் இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படம்  மலையாள சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லப்படுகிறது. 

 

சுமார் 100 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது நிலவி கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ படம் உலகம் முழுக்க வெளியாகவுள்ளதாக மோகன்லால் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மோகன்லாலுடன் இணையும் கமல்ஹாசன்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

kamal hassan to join in mohanlal movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.  இதனிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கமலிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 13 ஆண்டுகள் கழித்து கமலும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ளனர். முன்னதாக 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

தடை நீக்கம்; மோகன்லால் படத்திற்கு புதிய நிபந்தனை

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Ban on Mohanlal's Monster lifted in Bahrain

 

மோகன்லால் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதய்கிருஷ்ணா எழுத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

 

இப்படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இருப்பதாகக் கூறி வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், தேவையான மாற்றங்களை செய்து படத்தை தணிக்கை குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

 

இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தில் உள்ள 13 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்யுமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் மோகன்லால் நடித்த 'மான்ஸ்டர்' படம் பஹ்ரைன் நாட்டில் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் படத்திற்கு தடை விதித்த மற்ற வளைகுடா நாடுகளிலும் மறுமதிப்பீடு செய்யும் முயற்சியை படக்குழு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.