நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தீவிரமாக செயல்பட்டும் வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் வாக்குப் பதிவு செய்யப்படும் நாள், மற்றும் தேர்தல் வாக்கு எண்ணும் நாள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம் மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க; செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட; நான் சுகவாசி அல்ல பந்தா வாசி அல்ல. மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும் பாலூர் ஆரணியே அன்ன பட்சியே நினை என் மனதின் ஆழ்நிலை சக்தியாய் தாயார் மகளாய் துதித்து பணி செய்ய ஆணையிடுவாய். தாழ் திறவாய் தரணி போற்றும் ஆரணியே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமாவில் பயணித்துக் கொண்டே அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் மன்சூர் அலிகான், தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார். 1999 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக பெரியகுளம் தொகுதியிலும், 2009 ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராகவும், 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியப் புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். இப்போது இந்திய ஜனநாயகப் புலிகள் எனத் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளார். இதனை டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.