mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர்.

Advertisment

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும்வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment