![manoj bharathiraja explained about his father bharathiraja health condition](http://image.nakkheeran.in/cdn/farfuture/aAt4wipO7J0Ue2Au27NQEVyPL8eyQWVoQbuuKtEOISc/1662716451/sites/default/files/inline-images/15_48.jpg)
இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே "தான் நலம் பெற்று வருவதாக" ஒரு அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா. மருத்துவமனை சார்பிலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குநர் சுசீந்திரன் தான் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் படப்பிடிப்பில் இந்த மாதம் இறுதியில் பாரதிராஜா கலந்து கொள்ளவுள்ளார் என சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா தற்போது நலமுடன் வீடு திரும்புகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, "அப்பா நலமாக இருக்கிறார். ரொம்ப ஆக்ட்டிவாக இருக்கிறார், பழைய பாரதிராஜாவை பார்க்கலாம். அதே கிண்டல், கேலி அப்படியே இருக்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அனுமதித்தோம். இப்போது சிகிச்சை பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
அப்பாவிற்கு நுரையீரலில் கொஞ்சம் பிரச்சனை. அதனால் நண்பர்களின் அறிவுறுத்தலின்படி இந்த மருத்துவமனைக்கு வந்தோம். இதற்கான ஏற்பாடுகள் செய்த ஏ.சி சண்முகம் மற்றும் வைரமுத்து ஆகியோருக்கு நன்றி. மேலும் அப்பாவிற்கு சிகிச்சையளித்த எல்லா மருத்துவர்களும் எங்களுக்கு கடவுள் தான்." என பேசினார். மேலும் தனது தந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது சிகிச்சைக்கான மொத்த செலவும் தங்களது குடும்பத்தினரின் வங்கிக்கணக்கில் இருந்து மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாக மனோஜ் பாரதிராஜா தெரிவித்தார்.