Skip to main content

திரைப்பட தொழிலாளர்களுக்கு மணிரத்னம் நிதியுதவி!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
csfsfvsfv

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.

 

இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். மேலும் திரையுலகினரும் நிதியுதவியளித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா தொற்று காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”அவர் ரோடு போட்டுக்கொடுத்தால் நான் நல்லபடியாக வந்துவிடுவேன்” - மணிரத்னம் கலகல பேச்சு

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Mani Ratnam

 

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.  

 

நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், “நான் பேச நினைத்ததையெல்லாம் பாலாஜி சக்திவேல் பேசிவிட்டார். இந்த விழாவிற்கு இவ்வளவு வாரியர்ஸை லிங்குசாமி அழைத்து வருவார் என்று எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்திற்கான வார் சீன்ஸை இங்கு வைத்தே எடுத்திருப்பேன். ஹைதராபாத்வரை சென்று கஷ்டப்பட்டுவிட்டேன். லிங்குசாமி ரொம்பவும் பாசிட்டிவான மனிதர். அவர் மூலமாகத்தான் எனக்கு எல்லா இயக்குநர்களுடனும் தனிப்பட்ட அறிமுகம் கிடைத்தது. பொன்னியின் செல்வனை ஹைதராபாத்தில் ஷூட் பண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் இந்தப் படத்தை லிங்குசாமியும் அங்கு ஷூட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டார். நாங்கள் மெதுவாக வந்துகொண்டு இருக்கிறோம். நீங்கள் ரோடு போட்டுக்கொடுத்தீர்கள் என்றால் நான் பின்னாடியே நல்லபடியாக வந்துவிடுவேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

ஓடிடியில் வெளியாகிறதா 'பொன்னியின் செல்வன்' ? விளக்கமளித்த படக்குழு

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

Ponniyin Selvan film to release theatres

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவ ஆனந்த் பிரமாண்டமாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி முதலில் திரையரங்குகளில் வெளியாகும், அதன்பிறகு தான் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.