Skip to main content

சாலை விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Malayalam actor Mathew Thomas' family injured in road accident,

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் மேத்யூ தாமஸ். கும்பலங்கி நைட்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர் தண்ணீர்மதன் தினங்கள், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் லியோ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். மெலும் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற பிரேமலு படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் மேத்யூ தாமஸின் குடும்பம், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள சாஸ்தாமுகல் என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த மேத்யூவின் சகோதரர் ஜான் படுகாயம் அடைந்தார். பின்பு அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், மேத்யூவின் உறவினர் பீனா டேனியல்(61) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சோகமான விபத்து மேத்யூ தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பு கட்டை மீது பள்ளி பேருந்து மோதி விபத்து; மாணவர்கள் காயம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 School bus crashes into barricade; Students are injured

தடுப்பு கட்டையின் மீது மோதி அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பள்ளி மாணவ-மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்டன் என்ற தனியார் பள்ளி பேருந்து சுமார் 33 பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்டு நயினார் பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தத் தனியார் பள்ளி பேருந்து சின்னசேலம் அருகே குரால் கைகாட்டி பகுதியில் விருத்தாசலம் - சேலம் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கட்டை மீது தனியார் பள்ளி பேருந்து மோதி பேருந்து கவிழ்ந்தது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவ மாணவிகள் காயங்களுடன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் படுகாயங்கள் அடைந்த ஐந்து மாணவ மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ மாணவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்தத் தனியார் பள்ளியின் மீது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Next Story

‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Brain-Eating Amoeba Guidelines Released

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில், “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவிற்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.