Skip to main content

பிரம்மாண்ட மேடையில் ‘மாமன்னன்’ இசை; மேக்கிங் வீடியோ வெளியீடு!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Making of MAAMANNAN Audio Launch

 

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" எனப் பேசினார். 

 

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

 

இப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை 6 மணி அளவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார். இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் நடைபெற்றதை படக்குழு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மரியாதையா?” - அன்புமணி ராமதாஸ்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Anbumani Ramadoss has appealed to the Tamil Nadu government

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது 700 மாணவர்கள் வரை ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமித்தால் போதுமானது; அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அதிகபட்சமாக இரு ஆசிரியர்களை நியமித்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை 2-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதம் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இப்போது 1500 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதமும், அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் கூடுதலாக ஓர் ஆசிரியரும் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.

மாணவர்கள் வளரும் பருவத்தில் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உடற்கல்வி மிகவும் அவசியம் ஆகும். ஒரு பள்ளியில் 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றால், அவர் 4 அல்லது 5 வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து தான் உடற்கல்வி வகுப்பை நடத்த முடியும். ஒரே நேரத்தில் 150 முதல் 200 மாணவர்களை வைத்துக் கொண்டு யாருக்கும் விளையாட்டுகளைக் கற்றுத் தர முடியாது. மாணவர்களைச் சுற்றிலும் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மாணவர்களைக் காக்க வேண்டுமானால், அவர்களை விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுத்தராவிட்டால் மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கும் ஆபத்து உள்ளது. இதை உணராமல் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால், அவரது நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மரியாதையா? பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பை வலுப்படுத்தியும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“எனக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே போட்டி இருக்கிறது” - கமல்ஹாசன்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Kamalhaasan spoke about friendship with rajnikanth

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வருகிறது. இப்படம், வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் சித்தார்த், விவேக், மனோபாலா, பிரியா பவானி சங்கர், ரகுல் பீரித் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் மூன்றாம் பாகமாக இந்தியன் 3 ஆகவும் வெளியாகவுள்ளது. 

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை, மும்பை எனச் சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அந்தவகையில் மும்பையில் ‘இந்தியன் 2’ படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் ரஜினி உடனான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எங்களுடையது புதிய கூட்டணி அல்ல. நாங்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளோம். அதன் பிறகு சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் மற்ற போட்டியாளர்கள் போல் கிடையாது. எங்கள் இருவருக்கும் ஒரே குருதான். மற்ற நடிகர்களைப் போலவே எங்கள் இருவருக்கும் இடையே போட்டி இருக்கும். ஆனால், பொறாமை கிடையாது. எங்கள் இருவருடையதும் வெவ்வேறு பாதைகள். மேலும் நாங்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டது கிடையாது. இது நாங்கள் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தம்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்தி ஆடியன்ஸ் குறித்து பேசிய அவர், “எனக்கு பாடம் கற்பித்த இந்தி ரசிகர்களுக்கு நான் முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்நாடுதான் எனக்கான இடம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒரு இந்தியன் என்று எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் உணர்த்தினீர்கள். ஒரு தென்னிந்திய நடிகனாக இருந்த என்னை, நீங்கள்தான் ஒரு இந்திய நடிகனாக மாற்றினீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னுடைய முதல் இந்தி படத்தின்போது எனக்கு இந்தியில் ஒரு வார்த்தை கூட தெரியாது. உங்களுடைய ஆதரவும், கைதட்டலும் இன்றி மீண்டும் இந்த மேடையில் என்னால் தோன்றியிருக்க முடியாது” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.