Skip to main content

“அன்புத்தோழன் பூ ராமுவுக்கு இதய அஞ்சலி” - சு. வெங்கடேசன் எம்.பி இரங்கல்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

madurai mp su Venkatesan Condolences poo ramu

 

எழுத்தாளரும், நடிகருமான பூ ராமு காலமானார். கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தாலும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. இதன் காரணமாகத்தான் இவர் தனது பெயருக்கு முன்னாள் பூ ராமு என்று சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று, பேரன்பு, மழை நேரத்து மயக்கத்திலே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ள பூ ராமு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

 

அந்த வகையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட இரங்கல் பதிவில், “அன்புத்தோழன் மக்கள் கலைஞன் பூ ராமுவுக்கு எனது இதய அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட பதிவில், “நீர்ப்பறவை மீனவா, இடம் பொருள் ஏவல் சிகப்புத் துண்டு மாரியப்பா, கண்ணே கலைமானே விவசாயி இனி நான் காண வைத்திருக்கும் பாத்திரம் எப்படி நிறையும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.