'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ், "தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும்" எனப் பேசினார்.
உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'ஜிகு ஜிகு ரயில்...' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 'புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்து போகிறேன்' என்ற மாரி செல்வராஜின் கவிதையோடு பாடல் தொடங்குகிறது. பாடலை பார்க்கையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாடி வரும் பாடல் போல உள்ளது. எல்லா பிரச்சனைகளும் உள்ளம் மாறினால் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையை வடிவேலு மற்றும் உதயநிதியின் கதாபாத்திரம் உணர்வது போல் தெரிகிறது. இப்பாடல் கூறுவது போல் அமைந்துள்ளது.
யுகபாரதி எழுத்துக்களில் வரும், "'சரியான சரித்திரம் படைத்திட வா...', 'எல்லாம் மாறும், எல்லாம் மாறும்...உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்...', 'நஞ்சை புஞ்சை ரெண்டா நோகும்..' உள்ளிட்ட வரிகள் கவனத்தை பெறுகிறது. இப்பாடல் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் கமல் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.