உதயநிதி நடிப்பில் 2022ஆம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் காளி வெங்கட், பால சரவணன், டி.எஸ்.கே. என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் பாடல்கள், காளி வெங்கட்டிடம் பால சரவணன் பேசும் வசனம், தினேஷ் - சுவாசிகா காதல் காட்சிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது அவரிடம் படம் குறித்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக காளி வெங்கட்டிடம் பால சரவணன் பேசும் வசனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது ஆதிக்க மனநிலை இல்லாமல், வன்முறைக்கு போகாமல் அமைதியாக பலர் இருக்கிறார்கள். அப்படி இருப்பதும் தவறா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “கண்டிப்பாக தவறுதான். நமக்கு நாம் யாரென்றே தெரியாமல் இருப்பது தவறான விஷயம். நெருப்பு, பல விஷயங்களுக்கு பயன்படும். ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம். அதைப் பொறுத்துத்தான் அதன் குணம் மாறும். படத்தில் அந்த காட்சி வரைக்கும் காளி வெங்கட் கதாபாத்திரம் வெங்கடேஷ் பக்கம் இருக்கும். அப்புறம் இந்தப் பக்கம் வரும். யாராக இருந்தாலும் இரண்டு பக்கத்தில் ஒரு பக்கம் நிற்க வேண்டும். அமைதியாக இருப்பது தவறு.
நெஞ்சுக்கு நீதி படத்தில் ஒரு வசனம் எழுதியிருப்பேன். தப்பு பண்றவன் 5 சதவீதம் பேர், பாதிக்கப்படுகிறவன் 10 சதவீதம் பேர், மீதி 85 சதவீதம் பேர் எந்த கேள்வியையும் கேட்காமல் இருப்பார்கள். இவர்கள் கேட்டிருந்தால் தப்பு பண்றவன் யோசித்திருப்பான். இவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் அவர்கள் தப்பு பண்ணுகிறார்கள். அதைத் தான் அந்த காட்சியில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
பின்பு அவரிடம் ஒரு பெரும்பான்மையான கூட்டத்தை குத்திக்காட்டுகிற வசனங்கள் எழுதும் போது தயக்கம் இருந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நீங்க சொல்கிற அந்த பெரும்பான்மையான கூட்டத்தில் முதல் ஆள் நான். எனக்கு வலிக்கிறது. இன்றைக்கு அந்த வசனத்தைக் குறிப்பிட்டு நிறைய பேர் பேசுகிறார்கள் என்றால் அது பெரியளவு மக்களிடம் போய் சேந்திருக்கிறது என்று அர்த்தம். சுயசோதனை தப்பான விஷயம் இல்லை. கௌரவ குறைச்சலும் கிடையாது. அதை நாம் பண்ணலாம்” என தமிழரசன் பச்சமுத்து பதிலளித்தார்.