ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ரஜினி உடல்நிலை குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரஜினி பூரண குணமடைய வேண்டி பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருவதாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்தனர். இதையடுத்து ரஜினி உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்யும் வகையில் அந்த இடத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவதாக கடந்த 1ஆம் தேதி குறிப்பிடப்பட்டது. அதன் படி ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், கூலி படத்தின் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ரஜினி சார், நான்-சர்ஜிக்கல் செய்ய இருப்பதாக ஒரு 40 நாட்களுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். அதை வைத்து தான் பிளானே செய்திருந்தோம். அதனால் 28ஆம் தேதியே அவருடைய போர்ஷன் எல்லாம் ஷூட் செய்து அவரை அனுப்பியிருந்தோம். அதன் பிறகு தான் அவர், மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதன் பின்னர், நாங்கள் அங்கு சூட்டில் இருந்தோம். ஆனால், யூடியூபில் என்ன என்னமோ எழுதியிருந்தார்கள். அதை நாங்கள், அங்கிருந்து பார்க்கும் போது எங்களுக்கு ரொம்பவே பேனிக்காக இருந்தது. ரஜினி சாரின் ஹெல்த்தை மீறி படம் எடுக்கப்படுவதில்லை. ஷூட்டிங்கில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போய், ஏதாவது ஒரு சின்ன அறிகுறி காட்டியிருந்தால் கூட, நாங்கள் அனைவரும் ஹாஸ்பிட்டலில் தான் நின்றிருப்போம். நாங்கள் இன்று காலை 5 மணி வரை ஷூட் செய்திருக்க மாட்டோம். சன் பிக்சர்ஸ் மாதிரியான ஒரு ப்ரொடக்ஷன் ஹவுஸ், இது போன்ற ஒரு ஹீரோவுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு பணம் கொடுத்திருக்க மாட்டார்கள். முதலில், ரஜினி சாரை பார்ப்போம் என்று தான் சொல்லி இருப்பார்கள். ஆனால், யூடியூபில் பேசுகிறவர்கள் ஏதோ பக்கத்தில் இருந்து அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை பார்த்தது போல மிகவும் உறுதியாக பேசினார்கள்.
இந்த பிராஸஸ் 40 நாட்களுக்கு முன்பே எங்களுக்கு தெரிந்து அதுக்காகவே டைம்லைன் செய்து ஷூட் செய்து கொண்டிருந்தோம். அது எப்படி, இப்படி மாறி வைரல் ஆனது என்றே தெரியவில்லை. நிறைய பேர் யூடியூப் மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ரொம்பவே பேனிக்காக இருந்தது. அதை பார்த்த போது நாங்கள் நடுங்கி விட்டோம். அது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்துவிட்டது. ரஜினி சார் சொல்வது போல, ஆண்டவன் அருளால் அவருக்கு ஒன்னுமே ஆகாது, எப்போதுமே நன்றாக இருப்பார். இந்த வயதிலும், ரசிகர்களுக்காக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்யும் அந்த மனுஷனை நாங்கள் எல்லோரும் கொண்டாடுகிறோம். ஏதாவது ஒன்றை எழுதி யாரையும் பேனிக் செய்ய வேண்டாம் என்பதை மட்டும் வேண்டுகோளாக கேட்கிறேன். ஏதாவது வேண்டுமென்றால், எங்களிடம் கேளுங்கள். எங்களை ரீச் செய்யமுடியவில்லை என்றால், இங்கிருக்கும் சன் பிக்சர்ஸ் அலுவலகத்திடம் கேளுங்கள். ஷூட்டிங்கில் என்ன நடந்தது என்று அவர்கள் சொல்வார்கள்” என்று பேசினார்.