
‘லென்ஸ்’ படம் மூலம் விமர்சகர்களின் பாராட்டையும் சினிமா வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது ‘காதல் என்பது பொதுவுடமை’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரோகினி, வினீத், காலேஷ் ராமானந்த், அனுஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேன் கைண்ட் சினிமாஸ், சிம்மெட்ரி சினிமாஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் தயாரித்துள்ளா இப்படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் மலையாள இயக்குநர் ஜியோ பேபி இணைந்து வழங்குகின்றனர்.
கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் தன் பாலின ஈர்பாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. ட்ரெய்லரை பார்க்கையில் ஒடு குடும்பத்தில் மகளின் காதலை வரவேற்கும் பெற்றோர் அக்காதல் தன் பாலின ஈர்ப்பு காதல் எனத் தெரிந்ததும் எதிர்க்கின்றனர். இறுதியில் அக்காதல் என்ன ஆனது, அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியப் படி அமைந்தது.
இப்படம் காதலர் தினத்தன்று வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது லிஜோ மோல் ஜோஸிடம் தன் பாலின ஈர்பாளராக நடித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு அந்த கேரக்டர் பிடித்திருந்தது. அதனால் நடித்தேன். மற்றபடி கம்ர்சியல் அம்சம் இல்லை, இதற்குப் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போகும் என்றெல்லாம் நினைக்கவில்லை. எனக்கு பிடித்த கேரக்டர் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்” என்றார். பின்பு லெஸ்பியனா நடிக்கும் போது ஷூட்டிங்ல சங்கடமா இல்லையா? என்ற கேள்விக்கு, அந்த காட்சியில் அனுசாவுடன் நடித்ததால் ஈஸியாக இருந்தது என்று பதிலளித்தார்.