‘இறுகப்பற்று’ படம் மூலம் பிரபலமான அபர்ணதி, தற்போது ‘நாற்கரப்போர்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அ.வினோத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீ வெற்றி இயக்கியிருக்க வேலாயுதம் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகை நமிதா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் லெனின் பாரதி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது லெனின் பாரதி பேசுகையில், “ட்ரைலரில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒன்று துப்பறிவாளர்களின் வாழ்க்கை முறை. இன்னொன்று இரண்டு பிரிவுகளுக்கிடையே நடக்கும் போர். விளையாட்டை பற்றி பேச வேண்டிய தேவை இப்போது அவசியமாக இருக்கிறது. அதில் உள்ள அரசியல் பற்றி சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் பேசியிருந்தது. தொடர்ந்து இன்னும் பேச வேண்டும். அது போல ஒரு கதைகளத்தை எடுத்திருக்கிற இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
விளையாட்டை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று உடல்சார்ந்த விளையாட்டு, இன்னொன்று மூளை சார்ந்த விளையாட்டு. உடல்சார்ந்த விளையாட்டில் கருப்பின மக்களும் உடல் உறுதிவாய்ந்த மக்களும் தொடர்ச்சியாக சாதனை படைத்து வருவார்கள். ஆனால் இங்கு உடல் உறுதியாக இருப்பவனுக்கு மூளை உறுதியாக இருக்காது என்று பொய்யான கட்டமைப்பு இருக்கிறது. அதை சோம்பேறிகளும் அடுத்தவரின் உழைப்பை சுரண்டி உழைக்கிற கூட்டமும் நம்பவைத்துக் கொண்டே இருக்கிறது.
இது விளையாட்டில் மட்டும் இல்லை. கிரிக்கெட்டில் உள்ள தமிழ் வர்ணனையாளரிலும் கூட இருக்கிறது. கிரிக்கெட்டில் ஆரம்பித்து ஃபுட்பால், டென்னிஸ் என அனைத்து விளையாட்டின் வர்ணனையிலும் ஈடுபடுவர்கள் குறிப்பிட்ட கூட்டமாக இருக்கிறார்கள். தமிழ் கமெண்டிரி கேட்கும் போது எரிச்சலூட்டும் மாதிரி இருக்கும். கிரிக்கெட்டை ஆங்கிலத்தில் கேட்கும் போது அது விளையாட்டை சார்ந்தே இருக்கும். ஆனால் தமிழில் ஒரு எலைட் குரூப், தங்களுடைய சாதி வக்கிரத்தையும் சாதி ஆதிக்கத்தையும் தொடர்ச்சியாக செலுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் அவர்கள் சொல்லிவைத்திருக்கிற மூளையே இல்லை என நம்பவைத்துக்கொண்டு இருக்கிற கூட்டத்தில் இருந்து ஒரு குட்டி பையனை வைத்து முன்னால் கொண்டு வருவது மிகப்பெரிய தேவையான ஒன்றாக இருக்கிறது” என்றார்.