குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி, துஷி, ஆதித்ய கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மங்கை. ஜாஃபர் சாதிக் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். நாளை (23.02.2024) வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.
அவர் பேசுகையில், “பொதுவாக ஆண் கதாபாத்திரத்தை மையமாக வைக்கும் டைட்டில், ரொம்ப கம்பீரமா இருக்கும். அதில் இன்றைக்கு நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கும் ஆண்ட பரம்பரை போன்ற பெருமை விஷயங்கள் தான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் டைட்டில் மங்கை, அந்த டிசைனில் கீரல்கள், தாக்குதல்கள்... டைட்டில் டேக் லைனில் ‘ட்ராவல் ஆஃப் வுமன்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. அது மிகப் பெரிய அரசியல். எத்தனையோ ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடக்கப்படுகிற மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறோம். ஆனால் காலங்காலமாக தொடர்ந்து எல்லா சாதிகளிலும், சமூகங்களிலும், மதங்களிலும் ஒடுக்கப்படுபவர்கள் பெண்கள். அப்படிப்பட்ட சூழலில் மங்கை என்ற டைட்டில் முக்கியமானதாக இருக்கிறது.
வெங்கட் பேசும் போது, நடிகர்கள் யாருமே த்ரிஷா விவகாரம் பற்றி கேட்கமாட்றாங்க என்று சொன்னார். எப்படி கேட்பாங்க. இன்றைக்கு உள்ள அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வச்சு ஜெயிச்சவங்க. இன்றைய உச்ச நட்சத்திரங்கள், அடுத்து நாட்டை ஆள துடிக்கின்ற நடிகர்கள், எல்லாமே, அவர்களது ஆரம்பக்கட்ட படங்களில், பெண் உடலை மைய்யமா வச்சு தான் சினிமாவில் பயணப்பட்டு வந்திருக்காங்க. நான் சின்ன வயசுல இருக்கும் போது ரஜினி, கமல் பட போஸ்டரில் சில்க் ஸ்மிதா படம் தான் பெருசா இருக்கும். அதனால் அப்படி இருக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இந்த நடிகர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள். அந்த கனவை நாம் காணக் கூடாது. ஏனென்றால் அவர்கள் தான் பெண்களை உடலாக பார்க்கக்கூடிய சினிமாவை தொடர்ச்சியா எடுப்பது. பெண்ணை வெறும் உடலா மட்டுமே பாவிக்க கூடிய போக்கை ஏற்படுத்துகிற நாயகர்கள் ஒரு போதும் பெண் விடுதலைக்காக பேச மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினார்கள் என்றால் அதற்கு பின்னால் ஒரு சுயநலம் இருக்கும். பெண்களை நாம் உடலாக போதிக்காமல் சக மனிதனாக போதிக்க வேண்டும். அதை இப்படம் சொல்லிக்கொடுக்கும்” என்றார்.