பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் தங்கியிருக்கும் கட்டிடத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீல் வைத்துள்ளனர். ஆனால், சமூக வலைதளங்களில் லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று பரவிவிட்டதாக செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “நாங்கள் வசிக்கும் பிரபுகன்ச் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளதா என்று பலரும் எங்களிடம் தொலைபேசியில் கேட்டுவருகின்றனர். நாங்கள் வசிக்கும் கட்டிடத்தில் முதியோர்கள் பலர் இருப்பதால் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் கட்டிடத்துக்கு சீல் வைத்துள்ளனர். வழக்கமாக நாங்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கூட இந்த முறை மிகவும் எளிமையாக சமூக இடைவெளியுடனே கொண்டாடினோம்.
எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக வரும் போலிச் செய்திகளை தயவுசெய்து நம்பவேண்டாம். நாங்கள் எங்கள் கட்டிடத்தில் வசிக்கும் அனைத்து முதியோர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். கடவுளின் கிருபையாலும், உங்கள் அனைவரது வாழ்த்தாலும், எங்கள் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.