பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.
கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது.
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
They say time flies, and it's so true. Can't believe it's been 33 yrs since #ChinnaThambi took people of Tamilnadu by storm.
It changed our lives forever. The love, affection, and respect showered upon me, which continues to date, is unimaginable. Will always be humbled and full… pic.twitter.com/2F8mkZTEwf— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 12, 2024