ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். இப்படத்தை அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். 4 பேர் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு 8 பேர் இசையமைத்திருந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்து தள்ளினர். வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான விமர்சனத்தை வைத்தனர். அந்த வகையில், முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நாடாளுமன்றத்தில், “வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக் கேடானது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். பின்பு விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் பட ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி, “நச்சுத்தனமான ஆண்களின் கோட்பாடுகளை நியாயப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, அனிமல் படத்தை விமர்சித்துள்ளார். சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவரிடம், அனிமல் பட வெற்றி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில் நான் அனிமல் படம் பார்க்கவில்லை. ஏனென்றால் அது நான் பார்க்க விரும்பும் படமாக இருக்கவில்லை. ஒரு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், திருமணத்துக்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அனிமல் போன்ற ஒரு பெண் வெறுப்பு பேசும் படம் வசூலில் பெரியளவு ஈட்டும்பொழுது அதை வெற்றி பெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களில் கூட எனக்கு பெரிய பிரச்சினை இருந்தது. ஆனால் இயக்குநரை நான் குறை கூறவில்லை. ஏனென்றால் அவரை பொறுத்தவரை வெற்றிதான் முக்கியம். என் மகள்கள் அதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அனிமல் படத்தை பார்த்தார்கள். படம் பார்த்து திரும்பி வந்து, அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள் என எச்சரித்தார்கள்” என்றார்.