
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் மணிகண்டன், " இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி" என்றார்.