தமிழில் சாமி, திருப்பாச்சி, கோ என பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். மேலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் இருக்கும் இவர் 1999–2004 ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 75 வயதை கடந்து தற்போது வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கோட்டா சீனிவாச ராவ். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இறந்துவிட்டதாக பரவிய செய்தி வதந்தி. அதனை நம்பி பலரும் தொலைப்பேசியில் அழைத்து விசாரித்தனர். நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். நான் உகாதி பண்டிகைக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த சமயத்தில் இதுபோன்று வதந்திகள் வருகின்றன.
இதே என் இடத்தில் வேறு யாராவது முதியவர் இருந்திருந்தால் அவர் இதயமே வெடித்திருக்கும். புகழ், பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதற்காக இப்படியான வதந்திகளை பரப்புவது முறையல்ல. இந்த வதந்தி அறிந்து 10 காவல்துறையினர் என் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வந்தனர். அவர்களிடம் எதிர்காலத்தில் இதுபோன்ற போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என வலியுறுத்தினேன்" என்றார்.