Skip to main content

‘கூச முனுசாமி வீரப்பன்’ - நக்கீரனின் பிரத்யேக வீடியோக்களோடு வீரப்பன் சொல்லும் வீரப்பனின் கதை

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
Koose Munisamy Veerppan review

தமிழகத்தின் பத்திரிகைத் துறை வரலாற்றில் வேறெந்த பத்திரிகைக்கும், அதன் ஆசிரியருக்கும் நடந்திராத கொடுமைகளையும், சித்திரவதைகளையும், அவஸ்தைகளையும் சந்தித்தது நக்கீரனும் அதன் ஆசிரியரும் தான். ஆனால் நக்கீரன், அனைத்து துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி சமூகத்தில் நடக்கும் அவலங்களை உடைத்து உண்மையை வெளிக்கொண்டு வர, அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் வேலை செய்து, நீதியை நிலைநாட்ட இன்று வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறது. வீரப்பனை நேரில் சந்தித்து வீடியோ பேட்டி எடுத்ததை, கிட்டத்தட்ட 29 வருடங்களாகக் கட்டிக் காத்ததை, டாக்குமெண்டரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது ‘கூச முனுசாமி வீரப்பன்’.

இதுவரை வீரப்பனைப் பற்றி வந்த படைப்புகள் அனைத்துமே வீரப்பனைப் பற்றி காவல்துறை சொன்னதும், வீரப்பனைப் பற்றி மற்றவர்கள் சொன்னதுமேயாகும். முதல் முறையாக வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொன்னதை ஆவணப்படமாகவும், சித்தரிக்கப்பட்ட காட்சிகளோடும் தந்திருக்கிறது. டாக்குமெண்டரி என்றாலே சுவாரசியத்தன்மையற்று இருக்கும், விறுவிறுப்பு இல்லாமல் இருக்கும், ரசிக்கும்படியாக இருக்காது போன்ற காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த எல்லா அடிப்படைத்தன்மையையும் அடித்து உடைத்து, சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியாகவும் தந்திருக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த டாக்குமெண்டரி சீரிஸ், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாகப் பலரது பாராட்டுகளோடு பார்க்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 6 எபிசோடுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. வீரப்பனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று வீரப்பனைப் பற்றி தினசரி நாளிதழ்கள் ஏதேதோ எழுதுகிறார்கள். ஏனெனில் வீரப்பனா வந்து கேட்டு விடப்போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறார் நக்கீரன் மூத்த நிருபர் ஜீவா தங்கவேலு. கொலைகாரனை வீரன் என்று சொல்லக்கூடாது, ஆனால் வீரன்தான் என்கிறார் நக்கீரன் ஆசிரியர். வீரப்பன் ஒன்றும் ஹீரோ இல்லை கொலைகாரன் என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர் ஐபிஎஸ். பெயருக்கேற்றார் போல் அவர் வீரப்பன் என்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இவ்வாறாக ஒவ்வொருவரின் மாறுபட்ட பார்வையும், அதற்கான அவர்களது விளக்கமும் அப்படியே இந்த டாக்குமெண்டரியில் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் வீரப்பனை ஹீரோவாக காட்ட வேண்டும் என்றோ அல்லது வீரப்பனை வில்லனாக காட்ட வேண்டும் என்றோ, எவ்விதமான ஜோடனைகளும் இல்லாமல், வீரப்பன் என்னவாக இருந்தாரோ அதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த டாக்குமெண்டரி ஒரு நேர்மையான படைப்பாகும். வீரப்பனைப் பற்றி நாம் முன்னரே மனதில் வைத்திருந்த எல்லா பிம்பங்களையும் இந்த டாக்குமெண்டரி உடைத்து எரிகிறது. வீரப்பன் நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக, தீவிரமான கடவுள் பக்தி உள்ளவராக, காட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணிப்பதற்குத் தெரிந்து வைத்திருந்தவராக, விலங்குகளின் மொழி புரிந்தவராக, துப்பாக்கி சுடுவதில் வல்லவராக இருந்திருக்கிறார்.

அதே வேளையில் தன்னை காட்டிக்கொடுக்க முனைந்தவர்களை ஈவு இரக்கமற்று கொலை செய்கிற கொலைகாரனாகவும் இருந்திருக்கிறார். கொள்கைக்காக ஓடுகிறவனைப் பணத்துக்காக ஓடுகிறவர்கள் துரத்திப் பிடிக்க முடியாது என்பது பிரபலமான ஒரு வசனம். அதற்கேற்ப தமிழக, கர்நாடக காவல்துறையினரால், இராணுவத்தினரால் காட்டுக்குள் வைத்து இறுதிவரை பிடிக்க முடியாத காட்டின் ராஜாவாக இருந்திருக்கிறார். இதுபோன்ற மாற்றுப் பார்வையை பார்வையாளர்களுக்கு இந்த ஆவணப்படம் தருகிறது.

தன்னைப் பிடிக்க வந்த, துப்பாக்கியோடு சுட வந்த காவல்துறையினரை, அதிரடிப்படையினரை எவ்வாறு சுட்டுச் சண்டையிட்டார் என்று வீரப்பனே ஒரு எபிசோடில் நடித்துக் காண்பிக்கிறார். சினிமாவின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவர் ஒளிந்து மறைந்து சுட்ட விதத்தை விவரிப்பது அமைந்துள்ளது. 

வீரப்பனின் மூத்த மகளும், வீரப்பனால் கொல்லப்பட்ட காவலரின் மகளும் டாக்குமெண்டரியில் பேசுகிறார்கள். இரு வேறு விதங்களில் தகப்பனை இழந்தவர்கள் இருவரும், வீரப்பன் மகள் நியாயத்தின் பக்கம் நின்று பக்குவத்தோடு பேசுகிறார். காவலரின் மகள் தனது அப்பாவிற்காக எழுதிய கவிதையை வாசிக்கிறார். கல் நெஞ்சக்காரர்களையும் லேசாகக் கண்ணீர் விடத்தான் வைத்துவிடும். 

வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற தமிழ்நாடு - கர்நாடகா இரு மாநில காவல்துறையும் இணைந்து பழங்குடி மக்களிடையே நடத்திய அதிகாரத் திமிர்த்தனத்தையும், ஒர்க்‌ஷாப் என்ற பெயரில் நடத்திய பாலியல் ரீதியிலான கொடூரங்களையும், தாங்க இயலாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அந்த மக்களை ஆட்படுத்தியதையும் நக்கீரன்தான் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தது. பாதிக்கப்பட்ட மக்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று, நீதிகேட்டு சதாசிவம் கமிசன் முன்பு நிறுத்தியது. இன்றளவும் இந்த கொடூரங்களைத் தாங்கிய மரத்துப் போன மனதோடுதான் அவர்கள் வாழ்கிறார்கள். அப்படியே தான் இந்த டாக்குமெண்டரியில் பேசுகிறார்கள். இன்றளவும் அவர்களுக்கான குறைந்தபட்ச நிவாரணம் கூட கிடைக்காமல் இருப்பதுதான் அதிகார வர்க்கத்தின் பலமாகப் பார்க்கப்படுகிறது.

வீரப்பனுக்கு ஜெயலலிதா, கலைஞர், ரஜினிகாந்த், ராமதாஸ், வைகோ என்ற ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களின் மீதும் ஒரு பார்வையும், விமர்சனமும், கரிசனமும் இருந்திருக்கிறது. அதை அவர் விவரிக்கும் விதமும் நக்கலாகவும் இருக்கிறது. மேலும் இத்தொடரில் மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நக்கீரன் மூத்த நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், திரைக்கலைஞர் ரோகிணி, அரசியல் செயற்பாட்டாளர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனைப் பற்றிய அனுபவங்களையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் அவர்களது கருத்துகளைப் பகிர்கின்றனர்.

இந்த டாக்குமெண்டரி சீரீஸ்ஸை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் உடன் இணைந்து எழுதி, சித்தரிப்பு காட்சிகளை ஷரத் ஜோதி திறம்பட இயக்கியுள்ளார். இந்த படைப்பின் தொழில்நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்குள்ளேயே கேமராவை கொண்டு வந்து பிரம்மாண்டத்தை நிகழ்த்தியுள்ளார். டாக்குமெண்டரியின் புட்டேஜ் பல மணிக்கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும், அதை குறிப்பிட்ட நேர அளவிற்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பாகப் படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராம் பாண்டியன், இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் பின்னணி இசையின் பங்களிப்பு, டாக்குமெண்டரியை சினிமாவைப் போன்று ரசிக்க வைக்கிறது. நடித்த அனைவரும் வீரப்பன் வாழ்ந்த காலத்திலிருந்த பல மனிதர்களைக் கண் முன்னே நிறுத்துகிறார்கள். 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரின் உருவாக்கத்தில் இந்த டாக்குமெண்டரி உருவாகியிருக்கிறது. இந்த மூவரும் பெரும் நெருக்கடியான நிலையில்தான் இந்த படைப்பில் உழைத்திருக்க வேண்டும். ஏனெனில் எங்கேயும் வீரப்பனை ஹீரோவாகவும் காட்டவில்லை, வில்லனாகவும் காட்டவில்லை, வீரப்பன் என்னவாக இருந்தார் என்பதையும், வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் நடந்த கொடுமைகளையும், வீரப்பனால் கொல்லப்பட்டவர்களைப் பற்றியும் நேர்மையோடு சொல்லியிருக்கிறார்கள். இந்த நேர்மைதான் இந்த டாக்குமெண்டரியின் உண்மையான வெற்றியாகும்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 10/04/2024

 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சடை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

Next Story

சிறந்த ஆவணப்படத் தொடர் விருது வென்ற ‘கூச முனுசாமி வீரப்பன்’

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
koose munisamy veerappan wins best documentry series award

தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பில் பிரபாவதி ஆர்.வி. தயாரிப்பில் வீரப்பன் நக்கீரனுக்கு பேசிய பிரத்யேக பேட்டிகளைக் கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கியிருந்த இந்த சீரிஸிற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருந்தார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சீரிஸில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்ந்திருந்தனர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சீரிஸ் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் ரஜினி, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ், சேரன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் படக்குழுவைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிஸ் சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருது வென்றுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் நடந்த 16வது ஆண்டு எடிசன் விருது விழாவில், சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருதை இயக்குநர் மற்றும் நடிகர் பாரதிராஜா படக்குழுவினருக்கு வழங்கினார். அவரிடமிருந்து நக்கீரன் ஆசிரியர், பிரபாவதி, ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் மற்றும் ஷரத் ஜோதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.