பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு.
கூச முனுசாமி டாக்குமெண்டரி உருவாக்கத்தில் மூவரில் ஒருவராகப் பணியாற்றிய ஜெயச்சந்திர ஹாஷ்மி பேசியதாவது, “வீரப்பனின் மகளையும், வீரப்பனால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவரின் மகளையும் சந்திக்க வைப்பதாக ஒரு வெர்சன் எழுதி ஜீ5-ல் கொடுத்தோம். அது பிறகு வேறொரு வெர்சனாக மாறியது.
வீரப்பனைப் பற்றி நக்கீரன் மூன்று விசயங்களை செய்தது. அதாவது, வீரப்பன் எப்படி இருப்பார் என்பதை உலகுக்கு சொன்னது; அதோடு வீரப்பனின் சொல்லப்படாத கதைகளை வெளிக்கொண்டு வந்தது. வீரப்பன் செய்த தவறுகளை வெளிக்கொண்டு வந்தது. வீரப்பனின் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அதிகார அத்துமீறல்களை வெளியே சொன்னது” இதையெல்லாம் நேர்மையாக சொல்ல நினைத்தோம். அதுதான் இந்த படைப்பு என்றார்.