Skip to main content

'ரகு தாத்தா' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

keerthy suresh next with hombale films

 

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் கடைசியாக மலையாள படமான 'வாஷி' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் மாரி செல்வராஜ், உதயநிதி கூட்டணியில் உருவாகும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி, தற்போது ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தில் நடிக்கிறார். இதனிடையே தெலுங்கில் நானியின் 'தசரா', மற்றும் சிரஞ்சீவியின் 'போலா சங்கர்' படங்களில் நடிக்கிறார். இதில் 'போலா சங்கர்' படம் அஜித்தின் 'வேதாளம்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் படத்திற்கு 'ரகு தாத்தா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களைத் தயாரித்து வந்த  ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறது. 'பேமிலி மேன்' வெப் சீரிஸில் எழுத்தாளராக பணியாற்றிய சுமன் குமார் இப்படத்தை இயக்குகிறார். 

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசைப் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தைரியமிக்க ஒரு பெண், தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தை நகைச்சுவை கலந்து ஒரு குடும்ப படமாக உருவாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 

 

முன்னதாக தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கும் சுதா கொங்கரா இயக்கத்தில் இரண்டு படங்கள் தயாரிப்பதாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படங்கள் உருவாகும் எனத் தெரிவித்த நிலையில், பின்பு எந்த அப்டேட்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்