தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் ரகு தாத்தா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் ரகு தாத்தா படத்தை சுமன் குமார் இயக்கியுள்ள நிலையில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே நிறுவனத்தின் முதல் தமிழ் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் கிளிம்ஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது. இரண்டாவது கிளிம்ப்ஸ் கடந்த ஜனவரியில் வெளியானது. பின்பு சில தினங்கள் கழித்து டீசர் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. இதில் இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்து சில சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “என்னிடம் நிறைய பேர், நான் இந்தியில் நடிக்கும் பேபி ஜான் படம் டிசம்பரில் வருகிறது, ஆனால் நீங்கள் இந்தி திணிப்பு பற்றி தமிழில் படம் நடிக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். இந்தப் படம் பொதுவாக பெண்கள் மீது வரும் எல்லாவிதமான திணிப்பை பற்றியது தான். அதில் இந்தி திணிப்பை மட்டும் எடுத்து கதை பண்ணியிருக்கிறார் சுமன். படத்தில் சின்ன மெசேஜ் சொல்ல ட்ரை பண்ணியிருக்கிறோம். அது படம் பார்க்கும் போது புரியும். இந்தப் படத்தில் எந்த விதமான அரசியல் சர்ச்சைகள் இருக்காது. இது ஒரு காமெடி படம். ஜாலியாக சிரித்துக் கொண்டு பார்க்கலாம்” என்றார்.