lift

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisment

இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்தபோதிலும், கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் ரிலீசில் சிக்கல் இருந்தது. இதற்கிடையே,‘லிஃப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் பரவ ஆரம்பிக்க, இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கைப்பற்றியிருந்த லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இத்தகவலை மறுத்ததோடு, ‘லிஃப்ட்’ திரைப்படம் திரையரங்கில்தான் வெளியாகும் என உறுதியளித்தது.

Advertisment

இத்தகைய சூழலில்தான், ‘லிஃப்ட்’ படத்தின் தயாரிப்பளருக்கும் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பும் மாறிமாறி அறிக்கை வெளியிட்ட நிலையில், ‘லிஃப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி ‘லிஃப்ட்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ள ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் ட்ரைலர் நாளை (24.09.2021) வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

‘லிஃப்ட்’ பட வெளியீடு தொடர்பாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு திரையரங்கில் படத்தைக் காணும் ஆவலோடு இருந்த கவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.