
கவின் நடிப்பில் நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கிஸ்’. இப்படத்தின் மூலம் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் 2023ஆம் ஆண்டு பூஜையுடன் ஆரம்பித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்பு சில காரணங்களால் அவர் விலகி தற்போது ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில் கவின் நிற்க அவரது கண்கள் மறைக்கப்பட்டு, அவரை சுற்றி நிற்கும் ஜோடிகள் அனைவரும் முத்தம் கொடுத்த படியே நின்றிருந்தனர். இப்படம் தமிழ்,இந்தி,தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசரை பார்க்கையில், கிஸ் கொடுப்பதை வெறுக்கும் நபராக இருக்கும் கவின் மற்றவர்கள் கிஸ் கொடுப்பதை பார்த்தாலும் துரத்தி துரத்தி அடிக்கிறார். பின்பு ப்ரீத்தி அஸ்ரானியுடன் அவருக்கு காதல் ஏற்படுவதாக தெரிகிறது. அவர் கவினிடம் முதல் கிஸ் அனுபவம் குறித்து கேட்க, உடனே அதற்கான காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால் என்ன சம்பவம் என்று தெளிவாக காட்டப்படவில்லை. அது என்ன சம்பவம், ஏன் கவினுக்கு கிஸ் பிடிப்பதில்லை என்ற கேள்விக்கு இந்தப் படம் பதில் சொல்வது போல் உருவாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.