‘இ.பி.கோ. 302’ என்ற படத்தில் நடிகை கஸ்தூரி கதாநாயகியாக நடித்து வருகிறார். சலங்கை துரை என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நாகசக்தி, வர்ஷிதா மற்றும் வையாபுரி, ராபின்பிரபு, போண்டாமணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் அரசியல் குறித்து பல சர்ச்சைகளை எழுப்பும் கருத்துகளை பேசிய கஸ்தூரி, இந்த படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியவர்.
“இந்த படத்தில் துர்கா ஐ.பி.எஸ். என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு அதன்பிறகு இருக்கும் வாழ்க்கையை யாரும் பேசியது இல்லை. அதைப்பற்றி பேசக்கூடிய படம்தான் இது.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக பல கட்சிகள் என்னை தொடர்பு கொண்டார்கள். ஆனால், எனக்கு விருப்பம் இல்லாததால் அதை எல்லாம் மறுத்துவிட்டேன்.
இத்தேர்தலில் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்கள் பலர் போட்டியிடவில்லை. சிலர் சுயேச்சைகளாக தேர்தல் களத்தை சந்தித்திக்கிறார்கள். ஆனால், மக்கள் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. அரசியல் பற்றிய புரிதல்கள் எனக்கு தற்போது இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளேன். சுயேச்சையாக நிற்கமாட்டேன்” என்றார்.