சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், “கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்த படத்திற்காக வேலை செய்தவர்கள் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருந்தது என்று சொல்வார்கள். அதைக் கேட்டு கங்குவா ஆசீர்வதிக்கப்பட்ட படம் என்று எனக்கு தோன்றியது. இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பது இலகுவான விஷயம் கிடையாது. அண்ணனைப் பற்றி எனக்கு தெரியும், ஆடியன்ஸூக்கு இது போதும் என்று நினைக்கவே மாட்டார். அந்தளவிற்கு படத்தில் உழைப்பை கொடுப்பார். முதலில் நடிக்கத் தெரியாது, நடனம் ஆட தெரியாது, சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது, நடிகருக்கேற்ற உடல் இல்லை என பல வகையில் அண்ணனை விமர்சித்தார்கள். ஆனால் இப்போது அண்ணன், நடனம் நன்றாக ஆடுகிறார். டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடிக்கிறார். இன்றைக்கு அண்ணனின் புகைப்படம் இல்லாத எந்த ஒரு உடற் பயிற்சி மையத்தையும் பார்க்க முடியாது. அந்தளவிற்கு இளைஞர்களை எப்படி ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்கு அண்ணன் சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.
சூர்யா அண்ணனை பார்த்து எதையெல்லாம் நெகட்டிங் என்று பேசினார்களோ அதையெல்லாம் பாசிட்டிவாக மாற்றினார். உழைத்தால் உயர முடியும் என்ற எடுத்துக்காட்டுக்கு அண்ணனை தவிர வேறு ஆள் இல்லை. அவருடைய உழைப்பான கங்குவா படத்தை பார்க்க நாம் எல்லோரும் காத்திருக்கிறோம். அது பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். சிவாவுடன் சிறுத்தை படத்தில் ஒன்றாக பணியாற்றியிருக்கிறேன். இப்படியொரு கூலான இயக்குநரை நாம் பார்த்திருக்கவே முடியாது. படப்பிடிப்பு தளத்தில் ஹீரோவை எந்தளவிற்கு மரியாதையுடன் நடத்துகிறாரோ அதே அளவிற்கு துணை நடிகர்களையும் நடத்துவார். இந்த நல்ல பண்பை என்னுடன் பணியாற்றிய எல்லா இயக்குநரிடமும் சொல்லியிருக்கிறேன். தேர்வில் நன்றாக படித்தவர்கள் வெறும் ஸ்கேலை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வார்கள். அதுபோல தனது பணிகளை பற்றி முன்பே அனைத்தையும் தெரிந்துகொண்டு மிகவும் எளிமையாக வேலை செய்வார். ஆனால் எமோஷ்னல் காட்சிகளை விடமாட்டார். அதே போல் இந்த படத்திலும் அருமையான எமோஷன் காட்சி இருக்கிறது. மனிதர்களின் எமோஷன்களை தாண்டி இங்கு எதுவுமே கிடையாது. கங்குவா படத்தில் பிரம்மாண்டம் இருந்தாலும் அருமையான எமோஷன் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, கலை இயக்குநர் மிலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். இசையில் தேவி ஸ்ரீ பிரசாத்புதிய இசைகளை உருவாக்கியிருக்கிறார். கல்லூரி பருவத்தில் பாபி தியோல் படம் வெளியானால் பெண்களை பார்ப்பதற்காகவே தியேட்டர் போவோம். ஏனென்றால் அவர் படத்திற்கு 60% பெண்கள்தான் வருவார்கள். அதுவும் சேட்டு பெண்கள்தான் இருப்பார்கள். அவர்களை பார்ப்பதற்காகவே அங்கு செல்வோம். பாபி தியோல் ‘குப்த்’ என்ற படத்தில் நீளமாக முடியை வைத்துக்கொண்டு ஸ்டைலாக இருப்பார். அவரைப்போல் ஸ்டைலாக முடியை வைக்க வேண்டுமென்று நினைத்து கடைசியில் ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி ஆகிவிட்டது. அந்தளவிற்கு ஹீரோவாக அவரை ரசித்திருக்கிறேன். மற்ற பல நடிகர்கள் கங்குவா படத்தில் நடித்திருக்கின்றனர். ஆனால் அடையாளம் தெரியாத அளவிற்கு கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்திருக்கின்றனர். அவர்களின் உழைப்புக்காகவும் தயாரிப்பாளர் ஞானவேலுக்காகவும் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். ஞானவேல் ராஜா யாருக்காகவோ உதவி செய்ய போய் 10 வருஷம் மாட்டிக்கொண்டார். இந்த படம் அந்த எல்லா வலிகளையும் தாண்டி வெற்றி அடையும். ரோலக்ஸை நேரில் பார்க்க வேண்டும். அதனால் ‘கைதி 2’ படம் அடுத்த வருடம் எடுக்கவுள்ளோம்” என்றார்.