
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 6 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது.
“அருள்மொழியை கடல் விழுங்கிவிட்டதாம்..” என்கிற வார்த்தைகளோடு ஆரம்பிக்கும் ட்ரெய்லர் பரபரவென செல்கிறது. சோழ நாட்டை மதுராந்தகருக்கும் கரிகாலருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பெரியபழுவேட்டையரான சரத்குமார் சொல்ல, “பெற்ற தாயின் ஒரு மார்பை வெட்டி எடுத்துக்கொள் என்கிறீர்கள்” என, கரிகாலரான விக்ரம் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். முதல் பாகத்தில் அருள்மொழிவர்மனை காப்பாற்றிய ஊமை அரசி தான் என்று அருள்மொழிவர்மனே குந்தவையிடம் சொல்வதும், ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளுடனும் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் நந்தினியின் வாழ்வில் நடந்த கதைகள் அவர் சோழ நாட்டை பழிவாங்கத் துடிப்பதன் காரணமும் விளக்கப்பட்டு இருக்கும் என நம்பலாம்.
முதல் பாகத்தில் உலகமெங்கும் ஹிட்டடித்த பொன்னியின் செல்வன் பின்னணி இசையை ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே இசைத்து ஏ.ஆர்.ரஹ்மான் படத்தை மீதான ஆர்வத்தை எகிற வைக்கிறார். ஏப்ரல் 28 வரை தமிழ் சினிமா ரசிகர்களை ஹைப்பில் வைக்க பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் தவறாது.