பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் அவ்வப்போது அரசியல் குறித்தும் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இதில் பல கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பாலிவுட்டில் திரையுலகினர் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்தும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைக் கூறி வந்தார்.
அந்த வகையில் தற்போது அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படம் தோல்வியடைந்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பாக பதிலளித்த அவர் "சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லா விதமான சலுகைகளும் உண்டு. ரூ.2 கோடிக்கு இணையான நடிப்பை கொடுத்துவிட்டு ரூ.200 கோடி சம்பளம் பெறுகிறார்கள். எகானமி விமானத்தில் போகக்கூடிய இடத்தில் தனி விமானம் எடுத்துச் செல்கிறார்கள். அமீர்கான் பற்றி பேசுகையில், நான் குறிப்பாக புறக்கணிப்பு (Boycott) பற்றி பேசவில்லை.
உலக நாடுகளில் நம் நாட்டை சகிப்புத்தன்மையற்றது என்று கூறி, நம் நாட்டின் பெயரை களங்கப்படுத்தினார். நேர்மையான மற்றும் உண்மையான தேசபக்தர்களுக்கு மரியாதை தரும் பழைய படங்களால், சாதாரண மக்களைத் தொடர்பு கொள்ள முடியாது. 'லால் சிங் சத்தா' படம் தோல்வியடைந்ததற்கு புறக்கணிப்பு கலாச்சாரம் காரணம் அல்ல இந்தியாவுக்கு எதிரான அவரது கருத்துக்கள் தான்" என விமர்சித்தார் கங்கனா ரனாவத்.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தோல்வியடைந்த படம் 'லால் சிங் சத்தா'. இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் அமீர்கான் முன்னதாக ஒரு பேட்டியில் "இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை" எனப் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று (#boycottLaalSinghChaddha) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.