பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா, டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஒரு நாயிக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்த பழங்குடியினரின் பின்னணியில் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரஜினிகாந்தால் வெளியிடப்பட்டது. இப்படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினரருடன் மிஷ்கின், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது காளி வெங்கட் கலந்து கொண்டு பேசுகையில், “என் வாழ்கையில் நடந்த ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன். நான் சின்ன பையனாக இருக்கும் போது எங்க ஊரில் ஒரு நாய் இருந்தது. இருட்டில் இருந்தால் கூட தெரியாது. அந்த அளவிற்கு கருப்பாக இருக்கும். அதனால் அதற்கு கருப்பு என பெயர் வைத்தேன். எங்க அப்பாவுக்கு நாய் வளர்ப்பது பிடிக்காது. என்னைக்காவது ஒரு நாள் அந்த நாய் இறந்துவிடும், அந்த சோகத்தை நம்மால் தாங்க முடியாது என்பது அப்பாவின் எண்ணம். ஆனால் எனக்கு நாய் ரொம்ப பிடிக்கும்.
அந்த கருப்பு நாய் என் மேல் ரொம்ப பிரியமாக இருந்தது. அது வளர்ந்த பிறகு ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு ஊரில் உள்ள பத்து பதினைந்து பேரை கடித்து விட்டது. ஒட்டுமொத்த ஊரும் அந்த நாயிக்கு எதிராக நின்றது. அதை கொன்று விட வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்கள். நாயின் ஓனரிடமும் உரிமை வாங்கிவிட்டனர். ஆனால் அந்த நாய் என்னை மட்டும் கடிக்கவே இல்லை. எப்போதும் என்னுடன் அன்பாகவே பழகியது. அதனால் மொத்த ஊரும் என்னிடம் ஒரு நிர்பந்தம் வைத்தது. அதாவது, நாங்கள் கொடுக்குற விஷத்தை நீ அதுக்கு கொடுக்க வேண்டும், நீ கொடுத்தால் தான் அது சாப்பிடுது என்றார்கள். நானும் வேறுவழியில்லாமல் இட்லிக்குள் மறைத்து வைத்து ஊர் மக்கள் கொடுத்த விஷத்தை நாய்க்கு கொடுத்துவிட்டேன். அதுவும் சாப்பிட்டுவிட்டது. அப்போது ஒரு பார்வை பார்த்தது. அதை என்னால் கடக்கவே முடியவில்லை.
சாப்பிட்டு விட்டு தண்ணீர் தேடியது. ஆனால் அது சாக வேண்டும் என ஊர் மக்கள் முன் கூட்டியே தண்ணீர் தொட்டியை மூடி விட்டனர். அதனால் ஊருக்கு வெளியே போன அந்த நாய் அங்கிருந்த குட்டையில் தண்ணீர் குடித்து உயிர் பிழைத்துவிட்டது. ஆனாலும் ஊர் அந்த நாய்க்கு எதிராகவே இருந்தது. எனக்கு நம்ம கையால் சாகவில்லை என ஒரு எண்ணம். திரும்பவும் ஊர் மக்கள் கேட்டார்கள். நான் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டேன். அப்புறம் அந்த நாயை தூக்கில் ஏத்தி கொன்றுவிட்டார்கள். வெறி நாய் கடியில் இருந்து தப்பித்துவிட்டோம் என சந்தோஷப்பட்டனர். அந்த சூழலில் யார் பக்கம் நிற்பது என எனக்கு தெரியவில்லை. இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கு அந்த நினைவு வந்துவிட்டது” என எமோஷ்னலாகி கண்கலங்கியபடி பேசினார்.