சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி நடந்த இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பேசுகையில், "யார் யாரெல்லாம் ரஜினி சார் பற்றி பேச வேண்டுமோ, சூப்பர் சுபு 'ஹூக்கும்...' பாட்டில் எழுதிவிட்டார். ஆனால் அதில் ஒரு கரெக்ஷன். என் தாத்தா டாக்டர். கலைஞரும் ரஜினி சார் படங்களை விரும்பி பார்த்தாங்க. என் தந்தை முரசொலி மாறனும் ரஜினி சார் படங்களை விரும்பி பார்த்தார். என்னை பத்தி உங்களுக்கு தெரியும். என் மகளும் அப்படி தான். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பார்த்தோம்னா 3 வயசு 4 வயசு குழந்தைகளும் ரஜினி சார் பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்காங்க. அதனால் சூப்பர் சுபு சொன்ன மாதிரி, அப்பா, மகன், பேரன் என 5 தலைமுறைகள் சூப்பர் ஸ்டார் படங்களை ரசிக்கிறாங்க.
ரஜினி சார், ஒரு ரெகார்ட் மேக்கர். அவர் ரெகார்ட் பிரேக்கர் கிடையாது. அப்போ ரஜினி சாருக்கு போட்டியே இல்லையா என கேப்பீங்க. போட்டி இருக்கு. சகோதரர் தளபதி விஜய். அவர் சொன்ன மாதிரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி சிவாஜிராவ் தான். அதாவது ரஜினி சாருக்கு போட்டி ரஜினி சார் தான். ரஜினி சாருக்கு நிகர் ரஜினி சாரே. வேறு யாரும் கிடையாது. திரையுலகத்திற்கு வரவுள்ளவர்களும் சரி, வந்தவர்களும் சரி, எல்லாரும் ரஜினி சார் மாதிரி வர வேண்டும் என எதிர்பார்க்கிறாங்க. அப்படி ஆசை படுறதில் தப்பு கிடையாது. அவங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். உங்களுக்கு 72 வயசு ஆகும் போது, இப்போ ரஜினி சாருக்கு ஹீரோவாக படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறாங்க. அது போல வரிசையில் நிக்கட்டும்.
அதுமட்டும் அல்ல. இந்த வயசிலையும் ஸ்பீட், ஸ்டைல், மாஸ் ரசிகர்கள் கூட்டம் இருக்கட்டும். அப்படி உங்களுக்கு இருந்தால். அப்போது சொல்லுங்க நான் ரஜினி சார் இடத்துக்கு வந்துவிட்டேன் என்று. அது வரைக்கும் தமிழ் திரையுலகம்...இல்ல இந்திய திரையுலகத்தில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தாங்க. நான் உண்மையை தான் சொல்கிறேன்" என சற்று உணர்ச்சி பொங்க பேசினார்.