Skip to main content

"அமிதாப் பச்சன் படத்தால் தேவருக்கு ஏற்பட்ட நெருக்கடி" - தேவரின் மரணம் குறித்து பகிரும் கலைஞானம் 

 

sando chinnappa devar

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்பத்தேவரின் மரணத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய தொகையை ஒரே பேமெண்டில் கொடுத்து தேவர் புக் செய்தது குறித்தும் அமிதாப் பச்சன் சொன்னபடி கால்ஷீட் கொடுக்காதது குறித்தும் கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அந்தப் பணத்தை வெளியே வட்டிக்கு வாங்கித்தான் தேவர் கொடுத்தார். அதனால் மீண்டும் வட்டிக்கு வாங்கி அமிதாப் பச்சன் படத்திற்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டிய நிலை தேவருக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமிதாப் பச்சன் படம், ரஜினியை வைத்து ஒரு படம், தெலுங்கும் நடிகர் மோகன் பாபுவை வைத்து ஒரு படம் என மூன்று படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் தேவர். அமிதாப் பச்சன் படம் பாதி முடிந்திருந்த நிலையில், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என கிடைக்க கூடிய நாட்களில் எல்லாம் கால்ஷீட் வாங்கி அவர் படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். 

 

வட்டிச்சுமை அதிகமானதால் எப்போதுமே தேவர் டென்ஷனாகவே காணப்பட்டார். சுகர், பிரஷர் எல்லாம் அதிகரித்துவிட்டது. மூன்று படத்தின் படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் மூன்று நடிகர்களை வைத்து யாருமே அப்போது படம் எடுத்ததில்லை. படப்பிடிப்பிற்கு அனைத்தும் தயாரானவுடன் சென்னையில் இருந்து  ஊட்டிக்கு கிளம்பி வரச் சொல்லி  தேவருக்கு ப்ரொடக்ஷன் மேனேஜர் ஃபோன் செய்தார். ஊட்டி கிளம்புவற்காக தேவர் தயாராகிக்கொண்டு இருந்தார். அன்று, மோகன் பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு டயலாக்கை உதவி இயக்குநர் சேர்த்துவிட்டார். தேவர் கம்பெனி படத்தில் ஒரு சின்ன வசனத்தை சேர்த்தாலும்கூட அதை தேவருக்கு தெரிவிக்க வேண்டும். அவரின் ஒப்புதல் இல்லாமல் வசனத்தை மாற்றவோ சேர்க்கவோ கூடாது. ஆனால், உதவி இயக்குநர் அன்று ஒரு வசனத்தை சேர்த்துவிட்டார். 

 

கிளம்புவதற்கு முன்பு முதல்நாள் எடுக்கப்போகும் காட்சிகள் பற்றி தேவர் கேட்கவும், உதவி இயக்குநர் காட்சியை விளக்கி வசனத்தை வாசித்துக் காட்டுகிறார். அவரை இடைமறித்த தேவர், இது என்ன புது வசனம்... முன்னாடி இல்லையே என்கிறார். ஏற்கனவே இருந்த வசனம்தான், நீங்கதான் ஒப்புதல் கொடுத்தீங்க என்று உதவி இயக்குநர் சொல்ல தேவருக்கு கோபம் வந்துவிட்டது.  நான் எப்ப ஒப்புதல் கொடுத்தேன், பொய் சொல்றீயா என்று கடுப்பான தேவர், தோளில் போட்டிருந்த துண்டை தரையில் போட்டு தாண்டி இந்த வசனத்திற்கு நான் ஒப்புதல் கொடுக்கவே இல்லை என்கிறார். எந்த தயாரிப்பாளராவது உதவி இயக்குநருடன் சண்டை போட்டு துண்டை போட்டு தாண்டுவாரா? பணப்பிரச்சனையால் நிதானத்தையே இழந்துவிட்டார் தேவர். கடைசியில் அந்த வசனம் நீக்கப்பட்டது. இதுவெல்லாம் மாடியில் நடந்தது.

 

பின், படியிறங்கி கீழே வந்த தேவர், வீட்டில் இருந்த பூஜையறையில் முருகன் முன் நின்று என்ன இதுக்கு மேல சோதிக்காதடா முருகா... என்ன கொண்டுக்கிட்டு போய்டுடா என்று வேண்டினார். அப்போதுதான் அவரை கடைசியாக பார்த்தேன். தேவரின் நிலையை பார்த்து எனக்கு மனசு உடைந்துவிட்டது. பின், அவர் ஊட்டி கிளம்பிச் சென்றுவிட்டார். என்னுடைய அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பதற்காக நான் கிளம்பிவந்துவிட்டேன். மறுநாள் 12 மணிக்கு தேவர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. அதைக் கேட்டு எனக்கும் உயிரே போனதுபோல ஆகிவிட்டது.