ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தவர் நடிகர் ஜானி வேக்டர். ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் கடந்த 25ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 37.
இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மே 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ஜானி வேக்டர், சக ஊழியருடன் இருந்த போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் அவரது காரில் உள்ள ஒரு பொருளை திருட முயல்வதைப் பார்த்துள்ளார். அவர்களை நோக்கி போகும் போது மர்ப நபர்களில் ஒருவர், ஜானி வேக்டரரை சுட்டுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஹாலிவுட் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜானி வேக்டரின் தாயார், ஒரு ஆங்கில ஊடகத்தில், “என் மகன் திருடர்களோடு சண்டையிடவில்லை. இருப்பினும் அவனைச் சுட்டுக்கொன்று விட்டனர். உடனே மூவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டு ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை” எனக் கூறினார்.