Skip to main content

கலைஞர் பயோபிக் - ஆசையை வெளிப்படுத்திய ஜீவா

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
jiiva about kalaignar bio pic

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜூன் 3 வரை தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் வரிசையில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைகப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி கடந்த ஜூன் 1ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜால் திறக்கப்பட்டது. 

இதில் கலைஞரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ‘திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை’ என 100-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் ஹாலோகிராபி தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் கலைஞர் நேரடியாக மக்களுடன் தமிழைப் போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஒரு அரங்கில் ‘வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்’ காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சி ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் தி.மு.க. தொண்டர்கள், மக்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பார்த்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் ஜீவா கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சியைப் பார்த்து ரசித்துள்ளார். அவருடன் பா.விஜய்யும் இருந்தார். பின்பு இருவரும் செய்தியாளர்களைச் சந்துத்து பேசினர். அப்போது ஜிவா பேசுகையில், “கலைஞரைப் பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதலமைச்சராக அவர் செய்ததைப் பார்க்க முடிந்தது. கிட்டதட்ட 40 வருஷம் மக்களுக்காக பணி செய்திருக்கார். அதை ரொம்ப அழகாக இங்கு வைத்திருந்தனர். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக ஹாலோகிராமில் கலைஞர் பேசியது சிறப்பாக இருந்தது. அதே போல் பா.விஜய் எழுத்தில் இருந்த குறும்படம் அழகாக இருந்தது. என்னை அழைத்த பா.விஜய்க்கு நன்றி” என்றார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக நிறைய நல்லது செய்வதாக பாராட்டி அப்பணி தொடரவேண்டும் எனத் தெரிவித்தார்.

jiiva about kalaignar bio pic

பின்பு அவரிடம் கலைஞருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால், அதில் நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் “நிச்சயமாக அந்தப் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை. ஏனென்றால் சமீபத்தில் தெலுங்கில் அதே போன்ற கேரக்டர் பண்ணியிருந்தேன். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர். ஆனால் கலைஞரை வரலாற்றைப் படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக எடுத்தால் சரியாக இருக்கும். அதைப் பா.விஜய்யே இயக்குவார் என்று நினைக்கிறேன” என்றார். உடனே அருகில் அமர்ந்திருந்த பா.விஜய், “கண்டிப்பாக அது போல வாய்ப்பு கிடைத்தால் யாராலும் மறுக்க முடியாது. அது ஒரு வரலாற்றுப் பதிவு” என்றார். 

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா ஒரு பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனிடையே ஜீவா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்தார். யாத்ரா 2 என்ற தலைப்பில் உருவான இப்படம் கடந்த பிப்ரவரியில் தெலுங்கில் மட்டும் வெளியானது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் 101 - தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மரியாதை

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
tamil producers council celebrats kalaingar 101 birthday

தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தும் சமூக வலைத்தளப் பக்கங்களில் கலைஞர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர். 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “ஒரு பூ மலர்வது தனது செளந்தர்யத்தை விளம்பரப்படுத்தவல்ல; சுற்றுச் சூழலுக்குச் சுகந்தம் பரப்ப காற்று கைவீசித் திரிவது தன் இருப்பை இனங்காட்டவல்ல; நாசிகளுக்கெல்லாம் சுவாசம் பரிமாற. மழைத்துளி தரையிறங்குவது இடிகளின் துரத்தலுக்கு அஞ்சியல்ல;
பசித்த வேர்களின் திரவ உணவுக்காக. பூவாய், காற்றாய், மழையாய், இனம், மொழி மீது இயங்கிய தலைவா
உன் நூற்றாண்டை எடுத்துப் பல நூற்றாண்டுகள் உடுத்துக் கொள்ளும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோபாலபுரம் சி.ஐ.டி காலனியில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலை தூவி மரியாதை செலுத்தினார். 

இதனிடையே பல்வேறு திரைப்பிரபலங்களும் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

Next Story

'அவருடன் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன்' -பிரதமர் மோடி புகழாரம்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
'I fondly remember the conversations I had with him' - Prime Minister Modi's eulogy

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 101 பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவக வளாகத்திற்குள் புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மூத்த அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்களை வழங்கி பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,'கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது, அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.